மீண்டும் தென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா!!

தென்கொரியாவில் இரண்டாவது முறையாக கொரோனா பரவலின் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் அதிகரித்துள்ளது பொது மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரை அடுத்து, அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இருந்தது தென் கொரியா தான்.

முதல் பாதிப்பு உறுதியானதும் அடுத்த சில நாட்களில் மளமளவெனப் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் அந்நாட்டின் துரித நடவடிக்கை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளினால் 10,000 -த்துக்குள்ளேயே பாதிப்பைத் தடுத்து நிறுத்தியது தென்கொரியா.

அதன் பிறகு பெரும்பாலான மக்களுக்குச் சோதனை செய்து அறிகுறி இருக்கும்போதே அவர்களைத் தனிமைப்படுத்தித் தொற்று மேலும் பரவாமல் தடுத்தது.

தொடர்ந்து வைரஸ் பாதிப்பு பூஜ்ஜியத்தை அடைந்ததும் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவில் இருந்து விடுபட்டு தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இரவு விடுதிக்குச் சென்றபோது அவரிடமிருந்து பலருக்கும் வைரஸ் பரவியது.

இதனால் ஒரு மாதத்துக்குப் பிறகு தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் உருவாகத் தொடங்கின.

இந்த நிலையில் அங்கு நேற்று ஒரே நாளில் 79 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 68 பேருக்குத் தொற்றுகள் உள்ளூர்ப் பரவல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அதாவது கிட்டத்தட்ட 50 நாளுக்குப் பிறகு நேற்று அதிகம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனால் அங்கு தற்போது மொத்தமாக 269 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,344 - ஆக உள்ளது.

இருப்பினும் இந்த இரண்டாவது அலையை எதிகொள்ள இன்னும் ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தற்போதுள்ள இந்த எண்ணிக்கை அதிகரிக்க நேரிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த இரண்டாவது அலையில் அறிகுறி இல்லாமல் வைரஸ் பரவுவதாகவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது சற்றுக் கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post