நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!!

திருகோணமலை - சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சிறி ஞானேஸ்வரன் (கண்ணண்),செயலாளர் கணேசபிள்ளை குகன் ஆகியோர் நேற்று சம்பூர் பொலிஸாரால் கைது செய்யபப்ட்டிருந்தனர்.

குறித்த இருவருமே இன்றைய தினம் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ஒரு இலட்சம் பெறுமதியான ஒரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஒவ்வொரு திங்கட்கிழமை சம்பூர் பொலிஸ் நிலையத்தில் இவர்கள் கையொப்பமிட வேண்டுமெனவும் வழக்கு மீண்டும் ஜுன் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு நேற்றைய தினம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு முயற்சித்தனர் என மூதூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வேலாயுதம் வேல்மாறன் உள்ளிட்ட இருவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து வழக்கு ஜுன் மாதம் 01ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒவ்வொருவரும் திங்கட்கிழமையும் மூதூர் பொலிஸில் கையொப்பமிட வேண்டுமென தெரிவித்தும் இருவரையும் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post