விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று மட்டக்கள்பபு,கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தீபம் தொலைக்காட்சியின் செய்தியாசிரியரும் இளம் ஊடகவியலாளருமான திருகோணமலையை சேர்ந்த மிதுன் என்றழைக்கப்படும் இ.மிதுன்சங்கர் என்பவர் உயிரிழந்திருந்தார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பின்புறமாக இருந்த ஊடகவியலாளர் உழவு இயந்திரத்தின் டயர்களுக்குள் அகப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கோட்டைக்கல்லாறில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய நிலையில் அங்கு நின்ற உறவினர் ஒருவரின் வீடு தொடர்பான தகவல்களை கேட்டுக்கொண்டிருந்தபோது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மீது மோதியுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக இருந்தவர் உழவு இயந்திரத்தின் டயர்களுக்குள் சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது உழவு இயந்திர சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

நாளை மட்டக்களப்பு திருகோணமலை உட்துறைமுகத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு காலை 10.00மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post