கர்மாவும் தீர்வுகளும்; விசேட ஆன்மீகத்தொகுப்பு!!

உலகத்தில் இன்பம் துன்பம் பாவம் புண்ணியங்கள் அத்தனையும் உள்ளது அதே போல நோய்கள் துன்பங்கள் ஏற்படப்போகிறது என்று ஞானிகள் முற்கூட்டியே இவ்வுலகிற்கு கூறி அவ்வப்போது எச்சரித்துக் கொண்டும் அதிலிருந்து மீண்டிட வழி காண்பித்தும் வருகிறார்கள் இவ் விடையங்களை அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள் என்று பார்ப்போமானால் மேலே குறிப்பிட்ட இன்ப துன்பங்கள் நோய்கள் என அனைத்தும் இவ் மண்டலத்தில் உள்ளது; அவைகள் ஒரு சமயத்தில் இல்லாமல் போனாலும் இருக்கும் என்பதே உண்மை.

அதாவது தனி மனிதனது சித்தத்திலே அவன் துன்பப்பட்ட அல்லது பாவப்பட்ட விடயங்களை தான் வளமாக உள்ள நேரத்தில் நினைத்துப் பார்ப்பதுண்டல்லவா! அவ்வாறெனில் முந்தைய பதிவுகள் சித்தத்தில் பதிந்துள்ள காரணத்தால்தான் அவனால் நினைத்துப்பார்க்க முடிகிறதென்பது புலனாகிறது; ஆனால் அந்த விடயங்கள் அவனைப் பாதிப்பது கிடையாது அதாவது அவனது பிராண சக்தி அதிகரித்துள்ளதால் அவன் வளமாக வாழ்கிறான் அவ்வாறு வளமாக வாழ்கிறான் எனில் சித்தத்தில் பதிந்துள்ள தன் முன்னைய கடினமான வாழ்வினை எண்ணிப் பார்க்கிறான் ஆனால் பிராண சக்தியின் வலிமை அதிகமாக அவனுள் வியாபித்து இருப்பதனால் பழைய கரும வினைகள் அவனை தாக்குவதில்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறதல்லவா.

இருந்தும் பிராண சக்தி அவனுக்கு குறைவடையும் போது கரும வினைகள் அவனுள் மீண்டும் செயல்பட்டு வேதனை தருமல்லவா! இவ்விடயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொருந்தும் அதாவது அவர்களுக்குள் பிராண சக்தி அதிகரித்து காணப்படும் போது தமது பழைய துன்பங்களை எண்ணிப் பார்ப்பார்கள் அது அவர்களை தாக்கும் அளவிற்கு செயல் நிலைக்கு வராமல் பிராண சக்தி காத்து நிற்கும் அதுவே பிராண சக்தியினை குறைக்கும் காரியங்களில் தன்னையறியாமல் ஈடுபடும் போது சித்தத்தில் பதிந்துள்ள கரும வினைகள் செயல்பட்டு தாக்கத்தினை உண்டுபண்ணி ஒவ்வொருவருக்கும் வேதனை தருகிறது என்பது தெட்டத் தெளிவாகிறது.

அதாவது புவியில் உள்ள நல்வினை குறைந்து தீவினை அதிகரித்து தீவினையாளர்களுடன் இணைவதுவும் நோய்கள் வந்து சேர்வதுவும் நிகழ்கிறது பிராண சக்தி குறைந்தால் இவ்விடயங்கள் நிகழ்கிறது பிராண சக்தி அதிகரித்தால் அவை நிகழாமல் கட்டுப்பட்டு நிற்கிறது; அதே போல்தான் இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் நோய்களும் உலகத்தில் பிராண சக்தி குறைவடைந்த காரணத்தால்தான் அதன் தாக்கம் மேலோங்கியிருக்கிறது இந்நிலையில் உலகம் எவ்வாறான விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என ஞானிகள் முன்னமே தமது ஞானத்தால் எதிர்வு கூறியிருக்கிறார்கள்; இவ்வுலகில் பிராண சக்தியானது குறைவடைந்து வருகிறது அதனை மனிதர்கள் நிவர்த்திக்காவிட்டால் முடிவு இவ்வாறு அமையும் என்பதை அறிந்து பல வருடங்களாக இவ்வுலக மக்களை நோக்கி இவ்வாறு " பிராண சக்தியான ஆன்ம சக்தியினை கூட்டுங்கள்" "அதற்குண்டான தர்ம சிந்தனைகளை வளருங்கள்" "இறையின் பக்கம் மனதை திருப்புங்கள்" இறை பிரார்த்தனை தியான ஜெபங்களில் ஈடுபடுங்கள்" கூறியும் அதனை வெல்வதற்கான வழியினையும் காண்பித்துக் கொண்டும் அவற்றை கடைப்பிடிக்காதவிடத்து "இயற்கை சீற்றங்கள், நெருப்பால் அழிவு வரும், நோய்கள் பெருகும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என எச்சரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

பூமியில் இப்போது இருக்கும் அல்லது நிகழும் விடயங்கள் இல்லாமல் போனாலும் அவைகள் அண்டத்தில் இருக்கின்றன; பூமியில் மனிதர்கள் தர்மத்தை கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் அவர்களது பிராண சக்தி குறைந்து விடுகிறது அப்போது மீண்டும் மனித குலத்தினை நோயோ துன்பங்களோ காலத்திற்கேற்ப வேறுபட்ட பெயர்களில் வேறுபட்ட தன்மைகளில் பீடித்துக் கொள்கிறது.

பிராண சக்தி என்றால் உயிர்ச் சக்தி அதுவே ஆன்ம சக்தி அதனையே கடவுள் என்றழைக்கிறோம் எனவே அனைத்துலக மக்களும் பிராண சக்தியான உயிர் எனப்படும் ஆன்மாவின் பக்கம் சார்ந்து வாழ்ந்து வரும்போது பிராணணை மனித சரீரத்திலிருந்து பிரித்து மரணத்தை தரவல்ல தீய சக்திகளான நோய், துன்பம், பசி, பட்டினி போன்றவை மறைந்து போய் விடும்; ஆனாலும் அவைகள் அண்டத்திலிருந்து மறைந்து போவதில்லை முன்னமே கூறியபடி செயல் இழக்கப்பட்டு அப்படியே இருக்கும்; உதாரணத்திற்கு மின்சார இணைப்பு துண்டித்த இயந்திரம் போல செயல் இழந்து நிற்கும் மீளவும் மின்சாரம் அதற்கு வழங்கும் போது அது இயங்குமல்லவா அதே போன்றுதான் மனிதர்கள் தங்களது எண்ணமான மின்சாரத்தினை இறைபக்கம் திருப்பும் போது நல்லெண்ணங்களான இறை சக்தி அண்டத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு அவைகள் மனிதர்களை நேர்வழியில் பயணித்திட உறு துணையாக அமையும் அதுவே தீயவற்றை எண்ணும் போது அதே மின்சாரம் செயலற்று போயிருந்த தீய விடயங்களை அண்டத்தில் இருந்து ஈர்த்தெடுக்கும் அதனால் மனிதன் தீவினைகளை ஏற்று அதன் வழியில் பயணிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

மேலும் இதனை விரிவாக நோக்க வேண்டுமெனில் பல ஆன்மீக வரலாற்று சான்றுகளை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும் உதாரணத்திற்கு பஞ்ச பாண்டவர்களின் பரம்பரையில் உதித்த பரீட்சித்து மகாராஜா தர்மத்தை கடைப்பிடித்து தர்மத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு தன் நாட்டினை நல்லாட்சி புரிந்து வந்தார் அவ்வேளையில் கலியுகம் ஆரம்பமாகியது அப்போது கலிபுருஷன் பரீட்சித்து மகாராஜாவை நாடி வந்து தான் வசித்திட நாட்டில் ஓர் இடம் தருமாறு வேண்டினான்; ஆனால் சற்று சிந்தித்த பரீட்சித்து இடம் தரமுடியாது என மறுக்கிறார்; காரணம் கலிபுருஷனுக்கு தன் நாட்டில் வசிக்க அனுமதியளித்தால் தன் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்பட்டு தர்மம் நெறி பிறழ்ந்து மக்கள் ஆசைக்கு அடிமைப்பட்டு பசி பஞ்சம் பட்டினி தீராத நோய்கள் வந்து நாடே சின்னாபின்னமாகிவிடும் என்று உணர்ந்தார் இருந்தும் கலிபுருஷன் விடுவதாயில்லை நீங்கள் தர்மத்திற்கு பெயர் போன பரம்பரை தாங்கள் இல்லையென்று மறுப்பது தர்மமில்லை என்றான் அப்போது பரீட்சித்து நாட்டில் இடம் தரமாட்டேன் வேறு எங்காவது கேள் என்றார் ஈற்றில் மன்னரின் முடி எனப்படும் ராஜ மகுடத்தில் இடம் தருவதற்கு சம்மதித்தார்.

மகிழ்ச்சியடைந்த கலி புருஷன் அவ்விடத்தில் அமர்ந்து விடுகிறான் ஒரு சில நாட்களின் பின்னர் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பரீட்சித்து மகா ராஜாவிற்கு கலியியின் மாயையால் வழமைக்கு மாறாக களைப்பெடுத்து தண்ணீர்தாகம் அதிகமாக ஏற்பட்டது தாகசாந்தியடைய காடுகளில் நீரைத் தேடியலைந்து கடைசியில் ஒரு ஞானி தவம் செய்யும் பர்ணசாலைக்கு வந்தடைந்தான் அங்கே ஞானி ஆழ்நிலைத் தியானத்தில் மூழ்கியிருந்தார் கலிபுருஷனின் மாயையான தாகத்தால் தன் வசமிழந்த மன்னன் மிகவும் அதட்டும் பாணியில் ஞானியினது தவத்தினை குழப்பி தன் தாகத்திற்கான நீரினை அருந்திட பெரும் சத்தமிட்டு அவரை அழைத்தான் ஆனால் சமாதியில் வீற்றிருந்த அவரால் புற நினைவுகளை கிரகிக்க முடியவில்லை அதனால் பெரும் கோபம் கொண்ட அரசன் தன் தர்மத்தை மீறி அவரைஅவமதிக்கும் நோக்கில் அங்கு இறந்து கிடந்த பாம்பொன்றினை எடுத்து ஞானி கழுத்தில் மாலையாக போட்டு விட்டு சென்று விட்டான்.

இவ்விடயத்தினை கண்ணுற்ற ஞானியின் சீடர்கள் கங்கைக்கு குளிக்கச் சென்ற முனிவரின் மகனிடம் விடயத்தை கூறியவுடன் சக்திவாய்ந்த அவனும் பெரும் சினமடைந்து தன் தந்தைக்கு அவ்வாறு "பாம்பினை மாலையாக அணிவித்த அந்த அரசன் சர்ப்பம் தீண்டி இறக்க கடவது" என்று நீரின் மேல் ஆணையிட்டு அடித்து சாபமிட்டான் அவனது சாபத்தின் அதிர்வு ஞானியினை ஆழ்நிலை தியானத்திலிருந்து மீள் நிலைக்கு கொண்டு வந்தது; தன் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதை கண்ட அவர் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளதை உணர்ந்தார் உடனே தன் ஞானத்தால் அங்கு நிகழ்ந்த விடயங்களை கண்டுணர்ந்தார் உடனே மகனை அழைத்து ஏன் இப்படியொரு காரியத்தினை செய்தாய் மகனே! என்று கூறி பரீட்சித்து மகாராஜாவின் பரம்பரை அவரது தர்மம் தவறாத நேர்மையான ஆட்சி பற்றி எடுத்துக் கூறிவிட்டு உடனே மன்னனின் அரண்மனைக்கு புறப்படலானார்.

இதே வேளை அரண்மனை வந்த மன்னன் தனது கிரீடத்தினை களற்றி வைத்தவுடனேயே தான் தர்மத்திலிருந்து விலகி ஞானிக்கு செய்த காரியத்தினை எண்ணி திடுக்கிட்டான் மனம் வேதனைப்பட்டான் அந்த சோகத்தால் துடிதுடித்தான் பரிகாரம் செய்வதறியாது திகைத்து நின்றான்; அச்சமயத்தில் முனிவரும் மன்னரது அரண்மனையினை வந்தடைந்தார் உடனே மன்னனைக் காண வேண்டும் என்றுரைத்தார் மன்னனும் தான் இழைத்த தவறினையெண்ணி வருந்தியவனாய் ஓடோடிச் சென்று மன்னிப்பு கேட்டான் பிராயச்சித்தம் அருளுமாறு வேண்டினான் உடனே முனிவரும் தன் மகன் மன்னனுக்கு இட்ட சாபத்தினை பற்றி கூறி அதற்கான பிராயச்சித்தத்தினையும் இவ்வாறு உரைக்கிறார் "மன்னா நீர் உனது கிரீடத்தில் கலிபுருஷனுக்கு இடம் வழங்கினாய் அவன் தன் மாய சக்திகளை பிரயோகித்து உன்னை வீழ்த்தி தர்மத்தை பிறளச் செய்திட முனைந்தான் அவன் உன் கிரீடத்தில் அமர்ந்ததும் உனக்குள் இருந்த தர்ம சிந்தனை மறைந்து விட்டது ஆணவம், கோபம் தோன்றி உனக்கு தாகம் அளவிற்கு மீறி ஏற்பட்டு விட்டது அதனால் பலவீனம் அடைந்த உன்னால் எனது ஆழ் நிலைத் தியானத்தினை புரிந்து கொள்ள முடியவில்லை அதன் காரணமாக நீ இறந்து கிடந்த பாம்பினை என்மீது தூக்கிப் போட்டாய் இதனை என் சீடர்கள் நீராடிக் கொண்டிருந்த எனது மகனிடம் கூற அவனும் எனக்கு நேர்ந்த விடயத்தை எண்ணி கோபமடைந்து நீ சர்ப்பம் தீண்டி இறக்க வேண்டும் என்று சாபமிட்டான் அதனை எனது ஞானத்தால் உணர்ந்து உன்னை அதிலிருந்து மீட்கவே புறப்பட்டு வந்தேன் ஏனெனில் தர்மத்தை கடைப்பிடிப்போருக்கு கலியின் சூழ்ச்சியினால் இவ்வாறு துன்பங்கள் நேர்வதுண்டு அதற்கு உபாயமாக வேதவியாசரின் மகனான சுகப்பிரம்மம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவினைப் பற்றி உபதேசித்துக் கொண்டிருக்கிறார் நீ அவரிடம் சென்று உபதேசம் பெற்று வந்தால் உனக்கு எனது மகன் இட்ட சாபம் நீங்கி விடும்" என்று கூறி ஆசிவழங்கிச் சென்றார்.

ஆக இந்த வரலாற்றின் மூலம் வெளிப்படும் உண்மை யாதெனில் பரீட்சித்து மகாராஜாவிற்கு கலியின் பீடிப்பால் ஏற்பட்ட சாபத்தை போக்குவதற்காக சுகப்பிரம்மம்மத்தின் ஸ்ரீ கிருஷ்ணரைப்பற்றிய உபதேசத்தினை கேட்கும் போது அவரது ஆன்ம சக்தி அதிகரித்து ஞானியின் மகன் இட்ட சாபம் பலிக்காமல் போகிறது என்பதே உண்மை.

அது போலவே இம் மண்டலத்தில் பிராண சக்தி குறைவடையும் போது மனிதர்களை துன்பப்படுத்தும் காரணியான கலி எனப்படும் ஆசை, மோகம், காமம், கோபம், குரோதம், பொறாமை, எனும் தீய குணங்கள் வெவ்வேறு விதமான ரூபத்தில் மனிதர்களை காவு கொள்கிறது ஆகவே பிராண சக்தியினை கூட்டினால் துன்பமற்ற இன்ப வாழ்வு வாழலாம் அதற்காக சுகப்பிரம்மத்திடம் எவ்வாறு தன் சாபத்தை வென்றிட ஆன்மீக உபதேசம் பெற பரீட்சித்து மகாராஜா நாடிச் சென்றாரோ அவ்வாறு கலியுகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரையும் தாக்கக் கூடிய நோய் சக்தி பெற்று செயல் நிலைக்கு வந்து விட்டது உடனே ஆன்ம சக்தியினை அதிகரிப்பதற்காக எதனை பெரிதென்று மனிதர்கள் நாடி ஓடி செயலிழந்து போனார்களோ அவை அத்தனையினையும் நிறுத்தி அவர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்து இறை பக்கம் மனதை செலுத்தி ஆன்ம சக்தியினை கூட்டுவதற்காக ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது அதனை மனிதர்கள் உணர்ந்து பின்பற்றி வருவார்களானால் பிராண சக்தி வலுவடைந்து அண்டத்தில் பரவியுள்ள நோய் சக்தி முடக்கப்பட்டு விடும் பின்னர் மனிதர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கவாறு வாழலாமல்லவா.

அதாவது படைத்தவர் தன் படைப்பிற்கு பங்கம் வராதவாறு பாதுகாத்திடவே இவ்வாறெல்லாம் செய்கிறார் என்னும் தெளிவு தானாகவே பிறந்து விடும்.

மனித செயல்கள் அத்தனையும் அண்டத்தில் சேமிக்கப்பட்டுள்ளது இது எவ்வாறெனில் முன்பொரு நாள் நிகழ்ந்த இன்பமான விடயமோ துன்பமான விடயத்தினையோ சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கேற்ப அவற்றை ஞாபகப்படுத்தி அப்படியே விபரிக்கிறோம் அல்லவா! உண்மையில் அவை மறைந்து போயிருந்தாலோ அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ எமக்கு ஞாபகத்திற்கு வந்திருக்காதல்லவா! ஆக இந்த பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் நமது எண்ணத்தின் அல்லது செயல்களின் வடிவம் பதிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.

அதே போல்தான் தற்போது தாக்கம் கொடுக்கும் நோயும் எங்கேயோ எப்போதோ நிகழ்ந்த ஒன்று; அன்று பிராண சக்தி குறைவடைந்த போது ஏதோ ஒரு பெயரில் மனிதர்களை தாக்கியிருக்கும்; பின்னர் பிராண சக்தி அதிகரிக்கும் போது அது இல்லாமல் போயிருக்கும்; சந்தர்ப்பம் சூழ்நிலையால் தற்போதும் உலகத்து மனிதர்களுக்கு பிராண சக்தி குறைவடைந்துள்ளதனால் முன்பு கூறியபடி பழைய ஞாபகம் வந்து அதனை விபரிப்பது போல நோய், துன்பம், பிணிகள் மனிதர்களை புதிய பெயர் தாங்கி வந்து தாக்குகிறது.

ஆக அண்டத்தில் இருப்பவை அத்தனையும் இருக்கிறது ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் எது தேவையோ அதை பெறுவதும் கிடையாது பின்பற்றுவதும் கிடையாது.

என்னிடம் எல்லாம் இருக்கிறதுதானே எதற்காக நான் குருவை நாட வேண்டும் எனும் ஆணவம் அவர்களின் தர்மத்தை மழுங்கடித்து விடுகிறது காலப் போக்கில் பிராண சக்தி குன்றி நோய் துன்பங்கள் ஏற்பட்டு அனைத்து செல்வங்களையும் வைத்தியசாலை என்றும் வைத்தியச் செலவுகளுக்கும் செலவழித்து நோய்வாய்ப்பட்டவர்களாக மானிடர்கள் பாவத்தின் பாதாளக் குழியில் தள்ளப்படுகிறார்கள் இதனைத்தான் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று கூறியிருக்கிறார்கள்.

இதுவே ஞான குருவினை நாடி உயிர்சக்தியினை அதிகரித்திருப்போமானால் நமது அனைத்து செல்வங்களும் அதனை அனுபவிக்கும் நாமும் நலமாக வாழலாம்தானே; ஏனெனில் குரு எனப்படுபவர் நமது அந்தர் ஆத்மா அவரே குருவின் வடிவமெடுத்து கண்முன்னே காட்சியளிக்கிறார் அவரே கடவுள்; குருவின் பெருமை பற்றி ஆதிசங்கரர் இவ்வாறு கூறுகிறார் "உன் குருவின் பாதார கமலத்தில் அசையாத பக்தி வைப்பாயானால் காண்பாய் உன் உள்ளத்தின் உள்ளே இவ் உலகத்தை ஆளும் பரந்தாமனின் திருக்கோலத் திருக்காட்சியை" என்கிறார் அதாவது 

நம் உயிர் சக்தி எமக்கு நல்வழி காண்பித்திட ஒரு உருவம் ஏந்தி குருவாக அவதரித்துள்ளது அந்த உருவமெடுத்த குருவினை நாடி அவரது திருப்பாதத்தில் அசையாத பக்தியினை செலுத்தும் போது நம் உள்ளத்தின் உள்ளே மனித உருவமெடுத்து வந்துள்ள இறைவனான ஆன்மாவின் திருக்கோல திருக் காட்சியினை நாம் கண்டுணர்ந்து விடலாம் என்பதே அதன் பொருள் அவரையே ஞான குரு, ஆன்மீகக் குரு, சற் குரு, மகா யோகி, பஹவான் என்கிறோம்.

அந்த உயிர் சக்தியினைத்தான் நாம் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறோம் வழிபடுகிறோம் ஆனால் மாயைக்குள் சிக்கியுள்ள மனித சமுதாயம் இறைவன் யார்? எங்கிருக்கிறார்? என்ற உண்மைகளை உணராமல் அவர் பெரியர் இவர் பெரியவர் என்று ஆளுக்காள் சண்டை பிடித்துக் கொண்டும் தத்தமது உயிர்ச்சக்தியான ஆன்ம சக்தியினை குறைத்துக் கொண்டும் மதவெறி பிடித்து இன வெறி பிடித்து அடித்துக் கொண்டும் மாழ்கிறார்கள்.

இறைவன் ஒரே சக்திதான் ஆனால் பல உருவங்களை தாங்கி வருகிறார்.

உதாரணத்திற்கு மனிதர்கள் பல உருவங்களில் பிறக்கிறார்கள் அதே போல பல கடமைகளையும் ஆற்றுகிறார்கள் ஆனால் அவர்களை இயக்கும் சக்தி ஒரே சக்திதான்.

அதாவது மனிதர்கள் அனைவருக்குள்ளும் உயிர் சக்தி இருக்கிறது ஆனால் செயல் வெவ்வேறாக காணப்படுகிறது ஒருவர் பேசுவது வேறு இன்னொருவர் பேசுவது வேறு; அவர் பயணிப்பது கார் என்றால் இவர் பயணிப்பது மோட்டார் சைக்கிளாக இருக்கும்; இவ்வாறு ஒரே மின்சாரம்தான் குளிரூட்டியினை இயக்குகிறது, மின்சுழலியை இயக்குகிறது, மின்குமிழை ஒளிரச் செய்கிறது இப்படி பல சாதனங்களை செயற்பட செய்கிறது ஆனால் மின்சாரம் அனைத்திற்கும் மூலாதாரமாக தேவைப்படுகின்றதல்லவா ஆனால் அந்த மின்சாரத்தை பெற்று இயங்கும் சாதனங்கள் வெளிப்படுத்துவது வெவ்வேறு தன்மைகள் அல்லவா!

அவ்வாறேதான் இறைவனும் மனிதர்களுக்குள் வீற்றிருக்கிறார் ஆனால் ஒவ்வொருவரது சிந்தனைகள் வெவ்வேறாக காணப்படும் போது அந்த சிந்தனைகளுக்குரிய பயனை அவர்கள் அடைகிறார்கள் அல்லது அதன் வழியில் பயணிக்கிறார்கள் அதாவது அவர்கள் செய்த பூர்வஜென்ம வினைகளின் பயனாக அவர்கள் பிறக்கும் சூழல் தன்மைகள் பண்புகள் அவர்களது வாழ்வினை தீர்மானித்து வழிநடாத்தும் காரணிகளாக அமைகின்றன அந்த சந்தர்ப்பத்தில் அந்த சூழலில் அவர்களது குணங்கள் செயற்படுவதற்கு சக்தியினை வழங்குபவருக்கு பெயர்தான் கடவுள்; முன்னரே குறிப்பிட்டவாறு மின்சுழலியோ, குளிரூட்டியோ, மின்விளக்கோ அதன் தன்மைகளை வெளிப்படுத்த எவ்வாறு மின்சாரம் அவசியமாகிறதோ அவ்வாறே மனிதர்களது எண்ணங்களை செயற்படுத்த இறைவன் சக்தியினை வழங்குறார்; அதுதான் எதை நினைத்து வாழ்கிறார்களோ அதனையே அவர்கள் அடைகிறார்கள்; அது துன்பமோ இன்பமோ எண்ணத்தின் தன்மையினை வைத்து முடிவுகள் தீர்மானமாகிறது.

மின்சார சாதனங்களை இயக்கும் சக்தியான மின்சாரத்தை மனித கண்ணால் காண முடியாது ஆனால் சாதனங்கள் இயங்குவதனை வைத்து நம்மால் அறிய முடிவதனைப் போல மனித உருவங்களை பார்த்து கடவுளை காண முடியாது ஆனால் அவர்கள் இயங்குவதனை வைத்து இறை சக்தி அவர்களை இயக்குகின்றது என்பதை அறிய முடியும் மனித எண்ணங்கள் மாற்றமடையும் போது அதன் குணம் பண்புகளுக்கேற்ப சக்தியினை இறைவன் வழங்குகிறார் என்பதனை மேலே வரிசையாக கூறப்பட்டுள்ள உதாரணத்தினை வைத்து அறிய முடிகிறதல்லவா.

கருமாவும் தீர்வுகளும் எனும் தலைப்பின் பிரகாரம் மனிதர்கள் ஆன்ம சக்தியினை அதிகரிக்கும் போது கரும வினைகள் சக்தியிழந்து போகின்றன இறை பண்புகளான அன்பு, பரிவு, கருணை, காருண்யம் போன்ற நற்பண்புகள் வளர்கின்றன இதனால் இறை சார்ந்த வாழ்க்கை மனிதனுக்கு வசமாகிறது புற விசைகளான நோய்ப்பிணி, பசிப்பிணி நீங்கி சுபீட்சமான வாழ்வினை மனிதர்கள் வாழ்வார்கள் மாறாக ஆசை, மோகம்,காமம், கோபம், குரோதம் போன்ற தீய விடயங்களை நாடும் போது பிராண சக்தி குறைவடைந்து நோய்ப்பிணி, பசிப்பிணி அதிகரிக்கும் என்பதே நிதர்சனம்.

இவ்வாறு ஆன்ம சக்தியினை அதிகரித்து ஆறாவது அறிவால் சிந்தித்து எது தேவையோ அதன் பக்கம் மனதை சாய்த்து வாழ்ந்து இறைவனோடு இரண்டற கலந்து வழிகாண்பிப்பவர்களே ஞானிகள் அவ்வாறான பண்புள்ளவர்களை வைத்து மனிதர்கள் உண்மை வழிகாட்டியான குருவினை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அவ்வாறே ஞானிகள் வேப்ப மரத்திற்குள் கடவுள் தன்மை அதிகமாக உள்ளது என்று வழிபட்டார்கள் மஞ்சளுக்குள் நோயெதிர்ப்பு சக்தி உள்ளது என்றறிந்து அதனையும் புனிதப் பொருளாக போற்றி வழிபட்டார்கள் கல்லுக்குள் நல்ல தன்மை உள்ளதனை அறிந்து அதனை வைத்து வழிபட்டார்கள் நீருக்குள் நல்ல தன்மை உள்ளதனை உணர்ந்து அதனையும் வழிபட்டார்கள் இவ்வாறு இயற்கையில் படைக்கப்பட்ட அத்தனையினையும் ஆராய்ந்து அவற்றில் நல்ல தன்மையான இறைத் தன்மை உள்ளது என்றறிந்து அவை அனைத்தையும் வழிபட்டார்கள்; ஆன்ம சக்தியினை வளர்ப்பதற்கு துணை நிற்பவை அனைத்திலும் இறைத் தன்மை பொதிந்துள்ளது என்பதனை தமது ஞானத்தால் உணர்ந்தவர்களே ஞானிகள் அவர்களை நாடி மக்கள் செல்கிறார்கள் அங்கே சென்றதும் மலை போல துன்பமெல்லாம் பனிப்போல அகன்று போவதனையும் ஆயுள் அதிகரிப்பதனையும் நோய்கள் அகன்று போவதனையும் வைத்து அவர்களும் இறைவனும் வேறல்ல என்பதனை உணர முடிகிறதல்லவா!

இவை அனைத்துமே கருமாவும் அதற்கான தீர்வுகளாகவும் அமைகின்றன எனவே மனிதர்கள் இவ்வாறான இறை வழி காண்பிக்கும் ஞான குருவினை சரணடைந்து வாழ்வார்களேயானால் துன்பம் கலவாத இன்ப வாழ்க்கை வாழலாம் என்பது திண்ணம்.

ஒரு வாகனத்தை எடுத்துக் கொள்வோமானால் அதனை நேரத்திற்கு சுத்திகரித்து (Service) பராமரித்து வந்தால் அவ் வாகனம் பழுதேற்படாமல் அதன் பாகங்கள் சேதமில்லாமல் திருத்துனரிடம் செல்ல வேண்டிய தேவையில்லாமல் வீண் செலவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாப்பான மகிழ்வான பயணத்திற்கு உதவியாக இருக்கும் அதுவே அவ்வாகனத்திற்கு அளவுக்கதிகமான பாரத்தை ஏற்றி நேரத்திற்கு சுத்திகரிப்பை மேற்கொள்ளாது கவனிக்காமல் விட்டால் திடீரென அதன் பாகங்கள் உடைந்து போகலாம் அல்லது அந்த வாகனத்தின் எஞ்சின் வலு குறைந்து போய் விடுமல்லவா அதனை வாகனத்தின் மூச்சு குறைந்து விட்டது என்பார்கள்; அது போலதான் மனிதர்களுக்கும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஏற்பட்டு அவர்களும் சக்தியிழந்து போகிறார்கள் ஈற்றில் மனித வாழ்வினை சுகமாக வாழ முடியாமல் அங்கு வாகனத்திற்கு மூச்சுப் போனது போல் மனிதர்களது மூச்சும் அடங்கி சவமாகி போகிறார்கள்.

இதற்கு உதாரணமாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் குருகுல நண்பரான குசேலர் இல்லறத்தில் இணைந்து ஆசை கூடி 27 குழந்தைகளை பெற்று விட்டார் அதனால் அவரால் அத்தனை குழந்தைகளுக்கும் உணவு வழங்கவோ உடுதுணிகள் வழங்கவோ செல்வம் இன்றி மிகவும் வறுமையில் வாடினார் அதற்கு தீர்வு காண வேண்டி ஸ்ரீ கிருஷ்ணரிடம் துவாரகை நோக்கி செல்கிறார் ஏனெனில் ஸ்ரீ கிருஷ்ணர் முழுமையான ஆன்ம சக்தி அதாவது அவரே இறைவன்; அவரிடம் குசேலர் சென்றவுடன் அவரை அரவணைத்து அன்பு காட்டி உபசரித்து மகிழ்ந்தார்; குசேலர் ஆசைக்கு அடிமைப்பட்டு துன்பத்தை அனுபவித்திருந்தாலும் இறைவனை நாடி வந்ததன் காரணத்தால் அவரது ஆன்ம சக்தியான பிராண சக்தி கூடி விட்டது அதன் காரணமாக இறைவனான ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் எவ்வாறு செல்வங்களுடன் வாழ்ந்தாரோ அதே போல குசேலரின் வாழ்க்கையினையும் மாற்றி விட்டார் என்பது வரலாறு.

அங்கு குசேலர் ஆசை கூடி துன்பத்தை அனுபவித்தாலும் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியுடன் நாடிச் சென்று தனது பிராண சக்தியினை கூட்டி பெரும் செல்வங்களுடனும் 27 குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தது போல; அளவுக்கதிகமான பாரத்தினை வாகனங்களுக்கு ஏற்றி அதன் வலுவிழந்து போவது போல மனிதர்களும் மனதில் அளவுக்கதிகமான பாரத்தினை ஏற்றி பிராண சக்தி குன்றி ஆசையின் பக்கம் மனதை செலுத்தி துன்பங்களான நோய், வறுமை,சாக்காடுகளை அனுபவிக்கிறார்கள்; அதுவே மனிதர்கள் தகுந்த குருவினை அண்டி பிராண சக்தியினை கூட்டும் போது உலகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொடிய நோய் வலுவிழந்து விடும்; எப்பேற்பட்ட துன்பங்களையும் எதிர்த்து நின்று வெற்றிகாண முடியும் என்பது மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையாகிறது.

மனிதர்களை பீடித்துள்ள கருமாக்களை களைவதானால் ஒரு குருவினை சரணடைய வேண்டும் குருவானவர்தான் பிராண சக்தி அவர்தான் கடவுள் அவரே உயிர்ச்சத்து அவரே அந்தர் ஆத்மா இதை விட உயர்ந்த விளக்கத்தினை எவராலும் மனிதர்களுக்கு வழங்க முடியாது; இறை சக்தி மனித கண்களுக்கு புலப்படாத சூட்சுமம் அதே போல்தான் நோய், துன்பம், வறுமை போன்றவையும் கண்ணுக்கு தெரியாத சூட்சூம சக்தி ஆக இதனை வெற்றி கொள்வதற்கு கண்ணுக்கு தெரியாத பொருளான உயிர்சக்தியான ஆன்மாவான இறைவனால் மாத்திரமே முடியும் அதனை கண்டுணர்ந்தவரையே குரு என்கிறோம்; குருவும் இறைவனும் வேறு வேறல்ல என்பதனை மனிதர்கள் புரிந்து கொண்டாலே போதும் துன்பங்கள் இருந்த தடம் தெரியாமலேயே பறந்தோடிவிடும்.

ஒரு பொருள் இயங்குவதனை வைத்துத்தான் அதன் தன்மை குணம் பண்புகளை அறிய முடிகிறது; இறைவனும் சூட்சுமமானவர் அதே போன்று நோய்களும் சூட்சுமமானது இறைத்தன்மை உள்ளவர்களை நோய்கள் அணுகாது இறைத்தன்மை குன்றியவர்களை நோய்கள் தாக்கி விடுகின்றன இங்கே இருவேறுபட்ட சூட்சும நிகழ்வுகளின் செயற்பாட்டினையும் இரு வேறாக அறியவோ உணரவோ முடிகிறதல்லவா பிராண சக்தி கூடியவர் சுகமாக வாழ்வதும் பிராண சக்தி குன்றியவர் நோய்க்கு ஆட்பட்டு துன்பப்படுவதும் இருவேறாக நம் கண் முன்னே நிதர்சனமாகிறது.

எனவே சூட்சுமத்தை சூட்சுமத்தால்தானே வெல்ல முடியும் பிராண சக்தியான சூட்சும சக்தி அதிகரிக்கும் போது நோய் எனப்படும் சூட்சும சக்தி இல்லாமல் ஆக்கப்பட்டு விடும் இதுவே உண்மைத் தத்துவம்.

தற்போது உலக மக்களின் இயந்திர வாழ்க்கை நிறுத்தப்பட்டிருக்கும் வேளையில் அனைத்து விதத்திலும் மாசு பட்டிருந்த சூழல் தன்னைத்தானே சுத்திகரித்து விட்டது வளி மாசடைவு நிவர்த்திக்கப்பட்டு விட்டது ஏரிகள், ஆறுகள், கங்கைகள், அருவிகள், சுத்தமாகி விட்டன, நிலத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் நின்று விட்டன, ஓசோன் படலத்தில் தோன்றியிருந்த பெரும் துளை கூட தானாக மூடிவிட்டது இவ்வாறு நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களாலான பூமித்தாய் புதுப் பொலிவு பெற்று விட்டாள்.

அதே போல மனிதர்களும் பொறுமையாக இருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனைகள் செய்யும் போது பிராண சக்தி அதிகரித்து அவர்களுக்குள் இருக்கும் ஆசை, மோகம், காமம், கோபம், குரோதம் போன்ற எண்ணற்ற அழுக்குகள் சுத்திகரிக்கப்பட்டு விடும்; உலகத்தில் வாழும் அனைவரும் தம்மைத்தாமே சுத்திகரிக்கும் காலமே இது ஆனால் இதிலும் அலட்சியமாக இருப்பார்களானால் அழுக்குகள் மேலும் அதிகரித்து துன்பமே பெருகும்; உதாரணத்திற்கு நாம் வாழும் வீட்டினை தினந்தோறும் சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விடும் போது குப்பைகூழங்கள், அழுக்குகள், தூசுகள் படிந்து பாழடைந்து போகுமல்லவா அதுவே தினமும் சுத்தம் செய்து வந்தால் அழுக்குகள் இல்லாது சுத்தமாக இருக்கும் இல்லாவிடில் குப்பைகள் அழுக்குகள் அதிகரிக்கும் பாம்புகள், பூரான் என விஷ ஜந்துகள் குடி கொண்டு விடும் அப்போது நிம்மதியாக அவ் வீட்டில் நாம் வாழத்தான் முடியுமா? இல்லையல்லவா! அது போன்று பல அழுக்குகள் நிறைந்துள்ள மனித மனதினை தினந்தோறும் வீட்டினை சுத்தப்படுத்துவது போன்று தினந்தோறும் இறை பிரார்த்தனைகளில் ஈடுபடுத்தும் போது மனம் சுத்தமாக்கப்பட்டு சுகமாக வாழலாம்தானே! எனவே இறை வழிபாட்டினை தினந்தோறும் கடைப்பிடிப்பதே அழுக்கு சேராதவாறு சுகமாக வாழுவதற்குண்டான ஒரே வழி அன்றி வேறு வழியில்லை.

நமது வீட்டுக்கு மதிப்பு மிக்க விருந்தாளி ஒருவர் வரப் போகிறார் என்றவுடன் பரபப்பாக ஒவ்வொரு இடங்களையும் கவனத்துடன் சுத்தம் செய்து அழகு படுத்துவதனைப் போல இறைவன் எனும் பிரபஞ்ச இயக்கத்தின் அதிபதியினை நம் வீட்டினுள் வரவேற்று குடியிருத்த தீய அழுக்குகளை வைத்திருந்தால் அவர் வருவாரா? சற்றே சிந்தித்து பார்ப்போம். இதற்குத்தான் "சுத்தம் சுகம் தரும்" என்கிறார்கள் ஞானிகளால் காண்பிக்கப்படும் வழிகளில் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆசிரமங்களில், ஆலயங்களில் நிகழ்த்தப்படும் யாகங்கள், பூசை வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஜெப தியானங்களில் இடைவிடாது ஈடுபடும் போது மனதின் அழுக்குகள் நீங்கி விடும் பிராண சக்தி அதிகரித்து விடும் பிரபஞ்ச அதிபதியான இறைவன் நம் வீட்டினுள் குடியமர்ந்து விடுவார்.

மனிதர்களின் மனதில் அழுக்குகள் நிறைந்தால் துன்பம் வரும் பிராண சக்தி குறைந்து விடும் அவ்வாறு நிகழ்ந்தால் மனித குலம் அழிந்து விடும் என்பதனை தம் ஞானத்தின் மூலம் அறிந்த ஞானிகள் இறை பக்கம் மனதை செலுத்துங்கள் என்று கூவி கூவி அழைத்தார்கள் இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இது சுய நலம் அற்ற பொது நலம் வேண்டிய செயல் உலகிற்கு இவ் உண்மைகளை தெரிவிப்பது அவர்கள் கடமை அதை தீர்மானித்து செயற்படுவது மனிதர்கள் உரிமை .

மனிதர்கள் உலக மாயையின் பால் கொண்ட நாட்டத்தினால் ஞானிகள் காண்பிக்கும் ஆன்ம போதனைகளின் பக்கம் மனதை திருப்ப முடியாமல் அவர் அவர்கள் அறிவுக்கு தக்க உண்மை ஞானிகளை உணர முடியாமல் தவறான கோணத்தில் நோக்குகிறார்கள் அது அவர்களின் தவறல்ல அவர்கள் சார்ந்து வாழும் வாழ்க்கை முறையினால் ஏற்பட்ட குழப்ப நிலையே இதற்கு காரணமாகிறது; ஆனால் ஞானிகள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் அவர்கள் நோக்கம் இவ்வுலகினை நல்வழிப்படுத்த வேண்டும் ஒவ்வொரு மனிதர்களையும் இறைவனை உணரச் செய்ய வேண்டும் பிறவாப் பேரின்ப நிலையினை அடையச் செய்ய வேண்டும் எனும் உயர்ந்த நோக்கமேயன்றி சுய நலமோ பொருளீட்டும் நோக்கமோ அவர்களிடம் எள்ளளவேனும் கிடையாது.

மனித குலத்தின் நலனுக்காகவே தம் வாழ் நாளினை அர்ப்பணித்து கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஞானிகள் இறைவனோடு இரண்டறக்கலந்தவர்கள் இறைவன் வேறு அவர்கள் வேறல்ல என்பதனை மனிதர்கள் உணர வேண்டும் இராமபிரான் அவதரித்தார் மனிதராக, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்தார் மனிதராக, கண்ணகி அவதரித்தார் மனிதராக, இராம கிருஷ்ண பரமஹம்சர் அவதரித்தார் மனிதராக, சுவாமி விவேகானந்தர் அவதரித்தார் மனிதராக, சீரடி சாயி பாபா அவதரித்தார் மனிதராக அதே போன்று கலியுகத்தில் காயத்திரி சித்தராக பஹவான் முருகேசு சுவாமிகள் அவதரித்தார் மனிதராக, தற்போது உலக மக்களின் துன்பத்தை போக்கவென ஆன்மீகக் குருவாக மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் அவதரித்துள்ளார் மனிதராக. 

எனவே வரலாறுகளையும் மகான்கள் வாழ்வினையும் மக்கள் பின்னோக்கி பார்க்க வேண்டும் இவர்கள் அனைவருமே சாதாரண மனிதர்களாகவே பிறந்தவர்கள் ஆனால் தகுந்த குருவினை அடைந்து தமது பிராண சக்தியினை அதிகரித்து தம்மை யாரென்று அறிந்து தெளிந்து அதன் பின்னரே தர்மத்தை நிலை நாட்ட உலகிற்கு ஞான உபதேசங்களை நல்கினார்கள் இதுவே வரலாற்று நியதியாகிறது.

எனவே மனிதர்கள்தான் தம்மையும் தமது வாழ்வினையும் தீர்மானிக்க வேண்டும்; ஞானிகளது கடமை நியமம் தவாறாமல் நிகழ்கிறது மனிதர்கள்தான் அந்த நியதிகளை கடைப்பிடிக்க தவறுகிறார்கள்.

துன்பம், இன்பம் இவை இரண்டும் சிற்றின்பத்தை தரவல்ல சக்திகள் ஆனால் பிராண சக்தியான இறைச் சக்தி மாறாத திகட்டாத பேரின்பத்தினை தரவல்லது மனிதர்கள் சிற்றின்ப வாழ்வில் மூழ்கி சிக்கித்தவிப்பதை விடுத்து பேரின்ப வாழ்வான ஆன்மா சார்ந்த ஆன்மீக வாழ்விற்குள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது.

இந்த துன்பங்களுக்கான பிரதான காரணமாக உயிர் வதையும் அதன் மாமிசம் புலால்களை புசிப்பது போன்ற செயல்கள் காணப்படுகிறது இவை மனிதர்களின் பிராண சக்தியினை குறைத்திடும் தன்மைகளை கொண்டுள்ளது இதனை அறியாமல் மனிதர்கள் அதனையே தமது பிரதான உணவாக உட் கொள்கிறார்கள்.

சிலர் கேட்கலாம் மாமிசம், புலால் உண்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் காட்டில் வாழும் விலங்குகளான சிங்கம், புலி போன்றவைகள் அவற்றை உண்ணுகின்றனவையே அவற்றுக்கு ஏன் நோய்கள் வருவதில்லை என்று? 

ஆம் அவை மாமிச உண்ணிகள் அந்த விலங்குகளின் உணவு மாமிசம்தான் அதைத்தான் அவை உண்ண வேண்டும் எனும் தர்மம் இறைவனால் வகுக்கப்பட்ட நியதியும் கூட அதே போன்று மாடு, ஆடு, மான், மரை, யானை போன்ற தாவர உண்ணிகளும் அங்கே வாழ்கின்றனவே அவைகள் தாவர உணவுகளையே உட்கொள்ள வேண்டும் எனும் தர்மம் இறைவனால் வகுக்கப்பட்டுள்ளது இவ் விலங்குகள் அவைகளது உணவு தர்மத்தை மீறி சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகள் தாவரத்தை உண்டாலும் யானை, ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகள் மாமிசத்தை உண்டாலும் அவைகளுக்கு கண்டிப்பாக நோய்கள் ஏற்படும் ஏனெனில் அவைகளுக்கு வகுக்கப்பட்டுள்ள நியதி மாற்றமடையும் போது அல்லது அதை மீறும் போது பிராண சக்தி குறைவடைந்து நோய்த்தாக்கம் நிகழும்; அதே போன்றுதான் மனிதர்களும் வகுக்கப்பட்ட நியதியினை மீறி உயிர் வதைகள் புரிந்து அவற்றை உணவாக புசிக்க ஆரம்பித்ததும் சாத்வீக குணம் மறைந்து தாமச குணமான ராட்சச குணம் வலுப்பெறுகிறது உடல் முழுக்க ராட்ச குணம் பரவலடையும் போது அவர்கள் செயல், குணம், பண்புகளில் மாற்றம் ஏற்படும் அங்கே பிராண சக்தியான இறை சக்தி குன்றி செயலற்று நிற்கும் போது நோய்தாக்கங்கள் வேதனைகள் துன்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

அளவுக்கதிகமான மாமிசம் மற்றும் புலால்களை உண்ணும் நாடான சீனா முதலில் நோயால் பீடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து ஏனைய நாட்டில் மக்கள் உண்ணும் உணவுகளின் தர்மத்தை வைத்து கூடுதலாகவும் குறைவாகவும் அதே நோய் பரவ ஆரம்பித்தது ஏனெனில் உயிர் வதையும் அதை உண்பதுவும் மனித தர்மத்தை மீறிய செயல் ஏற்கனவே கூறியபடி விலங்குகள் எவ்வாறு தமது உணவின் தர்மத்தை மீறினால் நோய்கள் ஏற்படுமோ அதே நிகழ்வுதான் மனிதர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது கீழைத்தேச நாடுகளும் மேலைத்தேசத்து நாடுளின் உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றியமையே கீழைத்தேச நாடுகளும் தற்போது நோய்தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இங்கே ஒரு கேள்வி மனிதர்களுக்கு எழும் அதாவது தாவரத்திற்கும் உயிர் உள்ளதுதானே அது பாவமில்லையா என்று?

ஆம் தாவரத்தின் உயிர்த்தன்மை பிராண சக்தியின் வளர்ச்சிக்கு உறு துணை புரிகிறது சாத்வீக குணத்தை தருகிறது ஆனால் மாமிச உணவுகளோ பிராண சக்தியினை மழுங்கடிக்கச் செய்திடும் தாமச குணமான அரக்க குணத்தை தருகிறது இதுவே காட்டு விலங்குகளான சிங்கம், புலி போன்றவைகளை கண்டால் நம்மை கொன்று விடும் எனும் பயம் வருகிறது ஆனால் யானையினை கையெடுத்து வணங்குகிறோம் அல்லவா ஆனால் தாவர உண்ணியான யானைதான் அனைத்து விலங்குகளையும் விட அதிக பலம் பொருந்தியதாகிறது; சிலர் நினைக்கிறார்கள் மாமிசத்தை உண்டால்தான் பலம் கிடைக்கும் என்று ஆனால் அவர்களையறியாமல் அவர்களது ஆன்ம சக்தி சூறையாடப்படுகிறது ஏனெனில் மாமிச உணவால் ஏற்படும் பலம் அதீத கோபம் கொள்ள வைத்து யாரோ ஒருவரை அடிக்க வைத்து இறுதியில் சிறைச்சாலை கூண்டில் அமர வைத்து விடுகிறது அங்குதான் மனிதர்களுக்கு ஞானம் பிறக்கிறது நான் இதை ஏன் செய்தேன் கொஞ்சம் கோபத்தை தவிர்த்திருந்தால் இது நிகழ்ந்திருக்காதே இனி கோபப்படப்போவதில்லை எனும் சபதத்தினையும் பலர் எடுத்து நல் வாழ்க்கை வாழத் துவங்கி விடுகிறார்கள்.

இறைவனே இல்லை என்று கூறுபவர்கள் இறுதியில் இறைவன் உள்ளார் என ஒத்துக் கொண்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு காரணம் அவர்கள் ஒரு விடயத்தின் மூலம் விரக்தியுற்று கூறும் கூற்றுக்களே அவைகள் ஆனால் விரக்தி நிலை தளர்ந்து தெளிவு நிலைக்கு வருவார்களேயானால் இறைவன் இருக்கிறார் எனும் பேருண்மையினை புரிந்து விடுவார்கள் அவர்கள் வாழும் சூழல், தன்மை அவர்களை அவ்வாறு பேச வைக்கிறது அது அவர்களின் தவறல்லவே! 

தற்போது மனிதர்கள் தர்மத்தை மீறி செயலாற்றியதன் விளைவாக தங்களைத்தாங்களே சிறை வைத்துக் கொண்ட சம்பவம் உலகம் பூராவும் நிகழ்ந்துள்ளது அங்கே கோபம் கொண்டு ஒருவரை தாக்கி விட்டு சிறைச்சாலையில் தண்டனையை அனுபவிக்கும் போது பிறந்த ஞானத்தினைப் போன்று இன்றும் மனிதர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட்டுள்ளது இனிமேலாவது உயிர் வதைகளை தவிர்த்து சுய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பகுத்தறிவின் மூலம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்ற பேருண்மையினை உணர வைப்பதற்கே இயற்கை நம்மை நாமே சிறைப்படுத்திக் கொண்டு சிந்தித்திட அவகாசம் வழங்கியுள்ளது; மாயையின் பக்கம் மனதை திருப்பும் போது மனிதர்களுக்கு ஐந்தறிவுதான் செயல் புரிகின்றது ஆனால் அந்த ஐந்தறிவினால் துன்பங்களும் துயரங்களுமே நிகழும் அதுவே அந்த ஐந்தறிவினை கடந்து ஆறாவது அறிவை நோக்கி மனதை திருப்புவோமானால் மாறாத திகட்டாத பேரின்பத்தினை பெற்றிடலாம் என்பதே ஞானிகள் காண்பித்த இறை வழி.

ஞானிகள் தம் பிராண சக்தியினை வளர்த்திட இறைவழிபாடுகளையும் ஜெப தியானத்தினையும் நியமம் தவறாது செய்து தமது உணவுப் பழக்கத்தினையும் மாற்றியமைத்துக் கொண்டார்கள் அதன் விளைவாக அவர்களுக்குள் இறைத் தன்மை மேலோங்கி இறைவன் வேறு அவர்கள் வேறல்ல எனும் பரிபூரணத்துவம் பெற்றார்கள் அப்போது அவர்களை நாடி பல மக்கள் சென்று தம் துன்பங்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொண்டார்கள் அது மாத்திரமல்ல உலகில் எந்த தாக்கம் நிகழ்ந்தாலும் ஞானிகளையும் ஞானிகளை சார்ந்து வாழ்பவர்களையும் அவைகள் தாக்குவதில்லை காரணம் உயிர்சக்தி அவர்களிடம் மேலோங்கியிருக்கிறது ஆனால் இதே உலகில் அவ்வாறான உண்மை ஞானிகளை சார்ந்து வாழாதவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பது கண்கூடு.

எத்தகைய இயற்கை அனர்த்தங்கள் நோய் துன்பங்கள் நேர்ந்தாலும் ஞானிகள் அவற்றை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு சுகமாக வாழ்கிறார்கள் ஏனெனில் தாக்கத்தை வழங்கும் காரணி அவர்களின் உயிர்ச்சக்தியான ஆன்ம சக்தியின் முன்னே தவிடு பொடியாகிவிடும் இயற்கையே சீற்றம் கொண்டு கடல் எழுந்து வந்தாலும் தீ பற்றி எரிந்தாலும் அவற்றை தம் ஒரே பார்வையால் நிறுத்தக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ஞானிகள் ஏனெனில் பிரபஞ்சத்தை படைத்தவருக்கு அவர் படைத்த பொருள் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

இவ்வாறுதான் கலியுக மக்களின் துன்பங்களையும் அவர்களுக்குள் எழும் கேள்விகள் சந்தேகங்களையும் தீர்க்கும் முகமாக எந்த சுய நலமும் இன்றி எமது சற்குருநாதர் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தினை ஸ்தாபித்து ஞான வழி காண்பித்து வருகிறார். 

உலகம் உள்ளவரை இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் அவதரித்தே ஆகுவார் அவ்வாறே மனித குலத்தினை அழிவிலிருந்து மீட்டு அருள் புரிந்திட மனிதர்கள் செய்த புண்ணிய பலனே இன்று புண்ணியரெத்தினம் சுவாமிகளாக நம் முன்னே காட்சி கொடுக்கிறார் எனலாம்; எந்த வேடங்களும் புனையாமல் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து எல்லோரும் சமமே எனும் அடிப்படையினை உணர்த்தி தன்னை அண்டிவருவோருக்கு எந்த கட்டணமும் அறவிடாமல் உண்டியல் வைத்திடாமல் நன்கொடை கேட்டிடாமல் இந்த தார்மீகப் பணியினை அவர் குருநாதரான காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளின் ஆணையினை தன் இலட்சியமாக கொண்டு அதனை தன் சிரத்திலே தாங்கி அவர் அடிச்சுவட்டினை பின்பற்றி இந்த தெய்வீக ஞானப் பணியினை உயிர்கள் வேதனைப்படாமல் வாழ்ந்திட வழியினை காண்பித்து அருள் வழங்கி வருகிறார். 

உலகில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டிட இவ்வாறான உபதேசங்களை வழங்கி அஞ்ஞான இருளகற்றி மெய்ஞான வழிகாட்டிட கிழக்கிலே உதித்த ஆதவனாய் சர்வ சக்தியுடன் வீற்றிருக்கிறார்; ஆண்டவன் மானிட உருவினிலே அவதரிக்கிறார் உலகினிலே ..... குருவின் தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் இங்கே புண்ணியமே குருவாக வீற்றிருப்பது எத்தனை கோடி புண்ணியத்தினை நல்கிடும் என்பதனை நாம் கூறித்தான் தெரிய வேண்டுமா.

மனிதர்களின் துயர் தீர்க்கவே கலியுகத்தில் எம் குருநாதர் அவதரித்தார் கலியினை கல்கியில் கலந்து சத்திய யுகத்திலே இருத்தி அவர்களை இன்பமான வாழ்வினை வாழ வைக்கும் வரை சுவாமிகளின் ஆன்ம வழிகாட்டல்களும் ஞான உபதேசங்களும் தொடரத்தான் போகிறது இது சத்தியமான உண்மை.

கருமாக்களும் அதற்கான தீர்வுகளும் என்ன என்பதனை மனிதர்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும் அதுவே அனைவருக்கும் நன்மை பயக்கும். "முந்தியவர் முந்தியவரே" காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்"

                                    "வாழ்க வளமுடன் வாழ்க வையகம்"
                                             
                                                ஸ்ரீ பேரின்ப ஞான பீடம்
                                                பெரிய உப்போடை வீதி
                                                                  இல.07
                                                          மட்டக்களப்பு
                                                              இலங்கை0/Post a Comment/Comments

Previous Post Next Post