3 ஆயிரம் இராணுவத்தைக் கொன்றால்தான் மொட்டு கட்சியில் தேசியப் பட்டியல் கிடைக்குமா? மஹிந்தவிடம் சஜித் கேள்வி!!

ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்று கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான தகுதி இதுதானா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றும்போது,

"நாம் ஆனையிறவில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம்" என்று வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கண்டித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, "ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தினரைக் கொலை செய்ததாக கருணா அம்மான் உரையாற்றியுள்ளார்.

அதே உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனக்குத் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'தாமரை மொட்டு' சின்னத்தில் தேசியப் பட்டியல் கிடைப்பதற்கு இதுவா அவசியமான தகுதி?" - என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post