ஊடகப் பிரச்சாரங்களையிட்டு அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்...

ஊடக ஆரூடங்கள் என்ற பெயரில் வஞ்சனை செய்யும் பிரசாரங்களையிட்டு அம்பாறை மாவட்ட தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருந்து எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தங்கள் நூறு வீதமான வாக்குகளையும் கப்பல்ச் சின்னத்திற்கு அளித்துக் கருணா அம்மானை அமோக வெற்றியீட்டச் செய்ய வேண்டும் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷணன் தெரிவித்தார்.

அண்மையில் இணைய ஊடகமொன்றில் வெளியான தேர்தல் கணீப்பிடு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் எனும் ஆரூடம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் சில தினங்களுக்கு முன் ஒரு இணைய ஊடகமொன்றில் சகோதர இன ஊடகவியலாளர் ஒருவரால் 'தேர்தல் கணிப்பீடு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்' எனும் தலைப்பின் கீழ் தனது ஆரூடத்தைப் பதிவிடப்பட்டுள்ளது.

அவருடைய கணிப்பீட்டில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் கருணா அம்மானைக் கணக்கிலேயே எடுக்கவில்லை. இது வேண்டுமென்றே அவரால் திட்டமிட்டு எழுதப்பட்ட பதிவாக மட்டுமல்ல அவரது மன வக்கிரத்தையும் இது வெளிப்படுத்துகிறது.


மேலும், அவரது கட்டுரையின் இறுதியில் பொத்துவிலிருந்து மருதமுனை வரையுமுள்ள தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வீட்டுச் சின்னத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனையையும் முன்வைத்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டுமென்று அவர் கவலைப்படுவது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாகவே படுகிறது.

அம்பாரை மாவட்டத்தில் கருணா அம்மானுக்குரிய ஆதரவு அலை நாளுக்கு நாள் மேலெழும்பி வருவதை பொறுக்கமுடியாத முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர். இதன் ஒரு அங்கம்தான் இந்தத் தேர்தல்க் கணிப்பீடு என்று எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகளை பொறுத்தவரை கிழக்குமாகாணத் தமிழர்களிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பே எப்போதும் செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெறுவதும் ஒன்றேயாகும். அப்போதுதான் கிழக்கில் தமிழர்களுக்கெதிரான பாரபட்சமான செயற்பாடுகளை தங்குதடையின்றி தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்ற வஞ்சக எண்ணமே அது. இதனையிட்டுக் கிழக்குத் தமிழர்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருந்து எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தங்கள் நூறு வீதமான வாக்குகளையும் கப்பல்ச் சின்னத்திற்கு அளித்துக் கருணா அம்மானை அமோக வெற்றியீட்டச் செய்து முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post