கருணாவின் சரச்சைக்குரிய கருத்து; விசாரணைக்குழு அமைக்குமாறு கோரிக்கை!!

2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகையினால், குறித்த விடயம தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியாவில் வைத்து இன்று ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கருணா என்ற புலி உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. 1977 முதல் ஆணையிறவை ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பாதுகாத்தது. 2000ம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியின் போதே ஆணையிறவு வீழ்ந்தது.

இவ்வாறு ஆணையிறவு வீழ்ந்தபோது ஒரே நாளில் 2 ஆயிரம் படையினரை கொன்றதாக கருணா அம்மான் அறிவித்துள்ளார். இது தொடர்பில் எமக்கு கூட தெரியாது.

அப்படியானால் இந்த நாட்டில் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. 2000 பேரை எப்படி 24 மணிநேரத்துக்குள் கொல்வது? அப்படியெனில் அங்கு அப்பட்டமாக மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

2000 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை தற்போதுதான் அறிகின்றேன். உண்மையிலேயே என்ன நடந்துள்ளது, நாட்டுக்கு தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா அல்லது சூழ்ச்சியா?

இராணுவத்தில் இருந்த ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அவருக்கு இராணுவத்தின் மீது பற்று உள்ளது. எனவே, இவை தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி கேட்டுக்கொள்கின்றது.

கருணா அம்மானிடமும் விசாரணை நடத்தப்பட்டு, என்ன நடந்தது என்பது அறியப்படவேண்டும்." - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post