அரசியல் கொள்கை மாறாமல் தொடர்ந்து பயணித்த ஒரு தமிழ்தேசிய வாதியை நாம் இழ்ந்துள்ளோம்!!

அரசியல் கொள்கை, தடம் மாறாமல் தொடர்ந்து பயணித்த ஒருதமிழ்தேசிய வாதியை நாம் இழ்ந்துள்ளோம் என மண்டூர் மகேந்திரனின் இறப்புக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்தேசிய பற்றாளர் மண்டூர் மகேந்திரன் நேற்று தனது 74, அகவையில் உயிர்நீர்த்துள்ளார்.

அவரது சேவை மற்றும் பணிகள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் படுவான்கரைபெருநிலத்தில் மண்டூர்கிராமத்தில் 1946ம் ஆண்டு அவதரித்த மகேந்திரன் அவர்கள் பாடசாலையில் கல்விகற்கும் காலம் தொட்டே இலங்கை தமிழரசு கட்சியையும் அதன் தலைவர் தந்தை செல்வா அவர்களையும் நேசித்த ஒரு கொள்கைவாதியாகவும், தமிழ்தேசி உணர்வும் மண்பற்றும் கொண்டவராக திகழ்ந்தார்.

தமிழ் மாணவர் அமைப்பு, தமிழ் இளைஞர் பேரவை, இலங்கை தமிழரசுகட்சி, தமிழர்விடுதலை கூட்டணி, தமிழ்தேசிய கூட்டமைப்பு என அவரின் அரசியல் கொள்கை தடம் மாறாமல் தொடர்ந்து பயணித்த ஒருதமிழ்தேசிய வாதியை நாம் இழ்ந்துள்ளோம்.

1972, மே,22,ல. இலங்கை ஜனநாய சோசலீச குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நாள் (1972,மே,22) மண்டுர் மகேந்திரன் அவர்கள் மே22, எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்த கட்டுரை புத்தகமாக சுதந்திரன் பத்திரிகை அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இன்றும் கனவுகண்டது போல் எனக்கு ஞாபகம் வருகிறது அந்த புத்தகத்தின் அட்டையில் வலது கையைபொத்தி பிடித்தமாதிரியான படம் அதில் “மே22” என்ற வசனமும் அதன் கீழ் “மண்டூர் மகேந்திரன்”என்ற பெயரும்குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புத்தகம் தொடர்பாகவே அண்ணன் மண்டூர் மகேந்திரன் கைதுசெய்யப்பட்டு பல வருடக்கணக்கில் சிறைவைக்கப்பட்டார்.

அந்த காலத்தில் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா அண்ணர்,வேணுதாஷ் என பலரும்மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டகாலமாகும்.

பட்டிருப்பு தொகுதியில் அமரர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் தமிழ் தேசிய அரசியல் பணிகளை ஏற்றுஅவரின் வெற்றிக்காக உழைத்தவர் அன்னாரின் உறவினர்.

1977, பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாகசெல்லையா இராசதுரையும், தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக காசி ஆனந்தனும் நிறுத்தப்பட்டபோது பலஇளைஞர் பேரவை உறுப்பினர்கள் காசி ஆனந்தனுக்கு சார்பாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போதும்மண்டூர் மகேந்திரன் அவர்கள் மட்டக்களப்பு தொகுதியில் நடுநிலையை கடைப்பிடித்தார் ஆனால் பட்டிருப்புதொகுதியில் பூ.கணேசலிங்கத்தை ஆதரித்து பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட்ட அகிம்சை ரீதியான போராட்டங்களில் மாணவனாக இவர் கலந்துகொண்ட வரலாறுகள் உள்ளது.

1977, பொதுத்தேர்தலுக்குபின்பு தமிழர் விடுதலை கூட்டணி 18, ஆசனங்களை பெற்று அமரர் அ.அமிர்தலிங்கம்அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்த வேளையில் கொழும்பில் அமிர்தலிங்கம் அவர்களுடன் அவரின் பாராளுமன்ற தங்குவிடுதியில் மண்டூர் மகேந்திரன் தங்கி இருந்து தமிழ்தேசிய அரசில் தொண்டராகவும் சில காலம் சுதந்திரன் பத்திரிகையிலும் பணிபுரிந்த ஞாபகம் எனக்கு உண்டு,

எப்போதுமே அரச உத்தியோகத்திற்கு ஆசைப்படாத ஒருவராக இருந்தார் ஒருமுறை பட்டிருப்பு பாராளுமன்றஉறுப்பினராக இருந்த பூ.கணேசலிங்கம் அவர்கள் ஒரு அரச வேலைக்கு இவரை சிபார்சுசெய்தபோது தமக்குவேண்டாம் என உதறித்தள்ளினார்.

தமிழ் இளைஞர் பேரவையில் இரண்டு மகேந்திரன் பெயர்கள் பலமாக பேசப்பட்ட பெயர்களாகும் ஒன்று மண்டூர்மகேந்திரன், அடுத்தது மாங்குளம் மகேந்திரன் இவர்கள் இருவரின் பெயர்களை “மண்டூர்” என்றும்“மாங்குளம்” என்றும் ஊர் பெயரை குறிப்பிட்டு இளைஞர் பேரவை உறுப்பினர்கள் அழைப்பார்கள்.

மண்டூர் மகேந்திரன் அண்ணர் எப்போதுமே அடக்கம்,ஒழுக்கம்,நேர்மை, தன்னம்பிக்கை, தமிழ்தேசியபற்றுஎப்போதுமே இரத்தத்துடன ஊறிய ஒரு தமிழனாக வாழ்ந்தவர் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

எப்போதும் புன்னகை பூர்த்த முகமும் மற்றவரை மதிக்கும் பண்பும் இவரிடத்தில் நான் கண்ட உண்மைகள். ‘

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் தமிழ்தேசிய உணர்வை விதைத்த கவிஞர் காசி ஆனந்தன், பாசி என அழைக்கப்படும் வந்தாறுமூலை பா.சின்னத்துரை( பின்னாளில் இவர் விடுதலைபுலிகள் அமைப்பில்இயங்கிய போராளி பாதர்) மட்டக்களப்பு வேணுதாஷ், அரசடித்தீவு தம்பிராசா, அம்பிளாந்துறை அரசரெட்ணம் (விடுதலைபுலிகளின் மொருண்மிய்பொறுப்பாளராக இருந்த மாவீரர் டேவிட்) கொக்கட்டிச்சோலை தவராசா (தமிழீழ விடுதலைபுலிகள் உறுப்பினராய் இருந்த மாவீரர்) முனைக்காடு இன்பராசா இவர்கள் எல்லோருடனும் (இன்னும்பலர்) தமிழ்தேசிய அரசியல் செயல்பாட்டை வளர்தவர்.

1977, ஏப்ரல் 26ம் நாள் தந்தை செல்வா அவர்கள் இறைபதம் அடைந்தபோது மட்டக்களப்பில் இருந்துபேரூந்து மூலமாக யாழ்ப்பாணம் சென்றோம், அதில் மண்டூர் மகேந்திரன் அவர்களும் நேரடியாக தந்தைசெல்வாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதை நான் அறிவேன்.

மிதவாத அரசியல் மௌனிக்கப்பட்டு இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் 36, விடுதலைஇயக்கங்கள் தோற்றம் பெற்றன அந்த ஆரம்ப காலத்தில் பல போராட்ட தலைவர்களுடன் இவர் பழகிய வரலாறுகள் உண்டு குறிப்பாக உமாமகேஷ்வரன் மட்டக்களப்பில் இருந்த போது அவருடன் அரசியல் ரீதியாக ஆலோசனைகளை பரிமாறிய சந்தர்பங்களும் உண்டு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987,ல் செய்யப்பட்டு அதன்பின்பு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் போர் ஆரம்பமான காலம் தியாகி திலீபன் அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில்சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 1987, செப்டம்பர் 15, ல் ஆரம்பித்தார் அவருக்கு ஆதரவாகமட்டக்களப்பு வெபர் அரங்கில் விடுதலைபுலிகள் போராளி மதன் என்பவர் ஒரு அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்த உண்ணாவிரத ஏற்பாட்டாளர்களில் ஒருவராக மண்டூர் மகேந்திரன் அவர்களும்செயல்பட்டார். அந்த உண்ணாவிரம் தொடர்பான கருத்துரை ஒன்றை வழங்குமாறு என்னை மண்டூர் மகேந்திரன் அவர்களையும் அரசடித்தீவு தம்பிராசாவம் பணித்தனர். அந்த உணரணாவிரதம் இடம்பெற்ற இடத்தில்நானும்(பா.அரியநேத்திரன்) உரையாற்றி இருந்தேன்.

விடுதலைப்புலிகளின் பல போராளிகளை அரசியல் பொறுப்பாளர்களை அறிந்திருந்தார் அம்பிளாந்துறையில் எனது வீட்டுக்கு வந்து அந்த காலப்பகுதியில் அவர்களை சந்தித்து சென்ற பல சந்தர்ப்பங்கள் உண்டு குறிப்பாக கரிகாலன் டேவிட் என்பவர்களின் நண்பராக இவர் எப்போதும் இருந்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டாவது தேர்தல் 2004,ல் இடம்பெற்றபோது எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்தார், இதுபோல் 2010,ம் ஆண்டு தேர்தலிலும் எனது வெற்றிக்காக உழைத்தார்.

மட்டக்களப்பு அமெரிக்கமெசன் மண்டபத்தில் கடந்த 2012, ம் ஆண்டு மே மாதம் 27, ம் திகதி இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 14,வது தேசிய மாநாட்டில் மண்டூர் மகேந்திரன் அவர்களும் சம்மந்தன் ஐயாவால் கௌரவிக்கப்பட்டார்.

இன்று 74, அகவையில்(19/06/2020) அமரர் என்ற பெயர் அன்னார்க்கு சூட்டப்படுகிறது. உண்மையில் உள்ளத்தால் உயிராக தமிழ் தேசியத்துக்காக அவர் மாணவர் பருவம் முதல் இறக்கும் இன்று வரை கொள்கைமாறாத தமிழ்தேசிய உணர்வும் மண்பற்றும் கொண்டு வாழ்ந்து எமைவிட்டு பிரிகின்றார்.

அன்னார் பிரிந்தாலும் அவர் உள்ளத்தில் ஊறிய தமிழ்தேசிய உணர்வும் கொள்கையும் தொடர்ந்து முன் எடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மனத்திருப்தியான அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post